நாட்டு மக்களுக்கு உடனுக்கு உடன் செய்திகளை வழங்கி மக்களுக்குப் பணியாற்றுகின்ற ஊடகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவங்களை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
வெற்றியின் செய்திப்பிரிவு உட்பட அதன் சகோதர செய்திப்பிரிவின் மீது நேற்று அதிகாலை இனந்தெரியாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“‘வெற்றி எப்.எம்’ செய்திப்பிரிவின் ஊடாக மலையகத்தின் பல்வேறு செய்திகள் எவ்விதமான பாராட்சமுமின்றி வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் வெற்றியின் செய்திப்பிரிவை முற்றாக செயலிழக்கப்பட்ட சம்பவத்திற்கெதிராக முழு மலையகத்தமிழ் மக்கள் சார்பாகவம் எனது கண்டனத்தினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்”.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டு தண்டனை வழங்குவதற்கு உரிய தரப்பினர் முன்வர வேண்டும்.நாட்டில் தற்போது சுமுகமான சூழ்நிலை காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் பெரும் விசனத்துக்குரிய செயலாகும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.















