உள்ளம் சிவந்தது அன்று
உணர்வு சிவந்தது நேற்று
பாதம் சிவந்தது இன்று – இவனோ
வீரம் செழித்துச் சிவந்தன்
***
நடடா தம்பி நடடா – நீ
நடந்தே வீரம் எடடா
படவோ துன்பம் தமிழா -நீ
பிறந்தாய் இலையே எனடா
விடடா சோர்வை விடுவாய் – நல்
வேளை இதுதான் அடடா
தடுப்பாய் பகைவர் எண்ணம் – அவர்
தறிகெட்டோடச் செயடா
தொடுநீ இமயம் உச்சம் -அது
தொலைதான் இல்லை அச்சம்
தடையாய் எதுவும் வரினும் – அதை
தடுத்தே உடைத்து நடடா
படைதான் இழந்தோமென்றால்- இனிப்
படுத்தா கிடந்தோ மில்லை
எழடா இனியென் றெழுந்தோம் – இனி
எவண்டா முன்னே பார்ப்போம்
மடைதான் திறந்தால் வெள்ளம் – உன்
மனதை திறந்தாய் உள்ளம்
படும்வே தனையின் உச்சம் – அதில்
பாதை கொண்டாய் பயணம்
நடையாய் நீயும் நடந்து – வெகு
நலிந்தே சிவந்தன கால்கள்
விடையாய் நன்மை வருமே – உன்
வீரம்வலியின் மருந்தே
நடடா தம்பி நடடா – நீ
நடந்தே வீரம் எடடா
தடுநீ தமிழன் இன்னல் – உன்
தடங்கள் மழைமுன் மின்னல்
இடியாய் எழடா நிமிர்ந்தே – நீ
ஏகும்பாதை சிவந்தே
படியாய் மாறும் பயணம் – அதன்
பலனாய் துயரம் மாறும்
கிரிகாசன்















