வெள்ளைக் கொடிகளுடன் யுத்தத்தின் இறுதி நாட்களில் அரச படையினரிடம் சரண் அடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளைப் படுகொலை செய்ய வேண்டும் என்று பாதுகாப்பமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார் என்று சண்டே லீடர் பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கின்றார் என்று குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குக்காக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா எம்.பி கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
இவ்வழக்கு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர தலைமையில் சக நீதிபதிகளான வி.வரவெவ,எஸ்.சற்.ரஸீம் ஆகியோர் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் ஆரம்பம் ஆனது. சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரம் பொன்சேகாவுக்கு வாசித்துக் காட்டப்பட்டது.
அவர் குற்றப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார். இந்நிலையில் அரசுத் தரப்பு சாட்சிகள் 20 பேருக்கு மன்றில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.















