அசின் சமீபத்தில் இலங்கைக்குப் போன விவகாரமே தகித்துக்கொண்டு இருக்கும் நிலையில்… நடிகர் கருணாஸ், ‘நேர்த்திக்கடனுக்காக இலங் கைக்குப் போவேன்!’ என சொல்ல… கோலிவுட் வட்டாரமே சூடாகி இருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த 25-ம் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் அனலோ அனல்!
”அசின் கேரளத்துப் பெண். தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. அவர் இந்திப் படத்துக்காக இலங்கை போனாலும், இங்குள்ள நடிகர் சங்கத்திடம் அனுமதி
|
|
பெற்றிருக்க வேண்டும். ஆகவே, இனி தமிழ்ப் படங்களில் அசினை ஒப்பந்தம் செய்யக்கூடாது…” என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி ஆவேசப்பட்டார். அடுத்துப் பேசிய தலைவர் சரத்குமாரோ, ”நடிகர்களுக்குத் தடை போடுவது எல்லாம் கூடாது. இது குறித்து, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கங்களுடன் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்…” என்று சூட்டைத் தணித்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் பேசிய சத்யராஜ்தான் ஹை-லைட்! ”நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தொலைபேசியில் கருணாஸை மிரட்டியதாகச் சொல்கிறார்கள். ஆனால், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ரொம்ப நல்லவர்கள். தமிழ் உணர்வாளர்கள். தமிழீழம் பெறுவது ஒன்றையே தாகமாகக் கொண்டவர்கள். பலர் தங்கள் உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துவார்கள். சிலர் கோபத்துடன் வெளிப்படுத்துவார்கள். அப்படிக் கோபப்பட்ட சிலர்தான் கருணாஸை மிரட்டியதாகச் சொல்கிறார்கள். ‘குடும்ப விஷயமாக இலங்கையில் உள்ள கோயிலுக்கு வேண்டுதலுக்காகப் போகவேண்டும்’ என்கிறார் கருணாஸ். நான் நாத்திகவாதி. அதுபற்றிக் கருத்துக் கூற முடியாது. ஆனால், ஒன்றை கருணாஸுக்குத் தெரிவித்துக்கொள்வேன்… நிச்சயம் ஒருநாள் இலங்கையில் தமிழீழம் மலரும். அப்போது தமிழனுக்குச் சொந்தமான மண்ணில், புதுசாக ஒரு கோயில் கட்டுவார்கள். அந்தக் கோயிலில் கருணாஸ் தனது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ளட்டும். அதுமட்டுமல்ல… இதுவரை சாமியே கும்பிடாத இந்த சத்யராஜ், அந்தப் புதுக் கோயிலுக்குப்போய் சாமி கும்பிடுவான். அதுவரை கருணாஸ் தயவுசெய்து போகவேண்டாம் என்று அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்ஷே ஆட்சி செய்யும் இலங்கைக்கு வரச்சொல்லி, எனக்கு 10 கோடி ரூபாய் கொடுத் தாலும் போகமாட்டேன்..! இலங் கைக்குப்போய் சம்பாதித்துதான் சோறு தின்ன வேண்டும் என்கிற நிலை வந்தால், பட்டினி கிடந்தே சாகத் தயாராக இருப்பேன்!” என்று குமுறித் தள்ளினார்.
முன் வரிசையில் அமர்ந்து இதை எல்லாம் கேட்ட கருணாஸ் நம்மிடம்,
”நான் புதுக்கோட்டையில் பிறந்தவன். ஈழம்தான் என் பூர்வீக பூமி. தமிழீழம் பெறவேண்டும் என்கிற வெறி, சீமானைவிட எனக்கு அதிகம் உண்டு. நான், இயல்பாகவே முருகபக்தன். ‘தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உண்டே… அதில் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகலாமே…’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதெல்லாம் குலதெய்வத்தை வழிபடுவதுபோல் ஆகுமா? என் குலதெய்வமான முருகன் கோயில், கதிர்காமத்தில்தானே இருக்கிறது? அங்கே நான் நேர்த்திக்கடன் செலுத்துவது தப்பா? முதலில் வர்மா என்ற ஒருவர் செல்போனில் தன்னை, ‘சீமான் உதவி யாளர்’ என்று சொல்லிக்கொண்டு, ‘இலங்கைக்கு நீ போகக்கூடாது. போனால், தொலைத்து விடுவோம்…’ என்றார். அடுத்து, ‘நாம் தமிழர்’ இயக் கத்தைச் சேர்ந்த அதியமான் ரொம்பவும் மோசமாக மிரட்டினார். அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து பலர், ‘நீ சிங்களவனுக்குப் பிறந்தவனா?’ என்று கொச்சை கொச்சையாக எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். இதை எல்லாம்தான் அப்படியே கமிஷனர் ஆபீஸில் புகாராகக் கொடுத்தேன். நான் சிங்களனிடம் பணம் வாங்கிக்கொண்டு இலங்கை செல்வதாக அவதூறு பரப்புகிறார்கள். பணத்துக்கு ஆசைப்படுகிறவனா நான்? உச்சத்தில் இருக்கும் விஜய், சூர்யா எல்லாம் இரண்டு பசங்களை இன்ஜினீ யருக்குப் படிக்க வைக் கிறார் என்றெல்லாம் பேசுகிறார்களே… சின்ன நடிகனான நானே மெரிட் அடிப்படையில மார்க் எடுத்தும் கஷ்டப்படுகிற 25 மாணவர்களை இன்ஜினீயருக்குப் படிக்க வைக்கிறேன். என் பணக் கார நண்பர்களிடமும் ஏழை மாணவர்களுக்குப் படிக்க உதவச் சொல்லி வருகிறேன். இதை எல்லாம் என்றைக்காவது வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறேனா..?
அது போகட்டும், முதலில் இந்த விஷயத்தில் என்ன உண்மை என்பதைத் தெரிந்து கொள் ளுங்கள். இலங்கையில் ஒரு தமிழ் எஃப்.எம். இருக்கிறது. அது 24 மணி நேரமும் தமிழிலேயே ஒலிப்பது. அங்கே 300-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். அதில் 250 பேர் ஈழத்தமிழர்கள். அந்த நிறுவனத்தை இந்தியாவில் இருக்கும் பஞ்சாபி ஒருவர் நடத்துகிறார். அந்த ரேடியோ தொடங்கி 12 வருடங்கள் ஆகின்றன. அதற்காக இலங்கைக்கு வரும் என்னையும் கலந்துகொள்ளச் சொல்லி அழைத்தார்கள். ‘நான் வரமாட்டேன். கொழும்பில் தங்கி அங்கிருந்து கதிர்காமம் செல்கிறேன். வேண்டுமானால், கொழும்பில் இருக்கும்போது என் அறைக்கு வாருங் கள்…’ என்றுதான் சொன்னேன். ஆனால், நான் என்னவோ அந்த நிகழ்ச்சிக்குத்தான் செல்வது மாதிரி தவறாகத் திரித்து விட்டார்கள்.” என்றார் கருணாஸ் ஆதங்கத்தோடு.















